தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருப்தி – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னை உயர் நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் தாமாக எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குத் தடுப்பு மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து உரிய முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கொரோனா சோதனை முடிவுகள் வருவதில் தாமதம் நிலவுவதாகத் தெரிவித்தனர். கொரோனாவால் இறந்தோரின் முகத்தை அவர்களின் உறவினர்கள் பார்ப்பதற்காக முகம் மட்டும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து கொரோனாவில் இறந்தவரின் உடலை உறவினர்கள் அடையாளம் காண்பதற்கும், இறுதியாக முகத்தைப் பார்ப்பதற்கும் ஏதுவாக முகம் மட்டும் தெரியும் வகையில் உடலைப் பொதிய வேண்டுமென நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே