சாத்தான்குளத்திலிருந்து தூர்வாரத் துவங்கலாமே….

சு.பொ.அகத்தியலிங்கம்

ஜூன் 26 ஐ உலகம் முழுவதும் ‘சித்திரவதைக்கு எதிரான நாள்’ ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் செய்தி இந்தியாவில் ஆகப் பெரும்பாலோருக்கு போய்ச் சேராத செய்தி. தமிழகமும் விதிவிலக்கல்ல.

இந்திராகாந்தி அவசரகால நிலை பிரகடனப்படுத்திய நாளும் இந்நாளும் ஒன்றாக வரினும் ; அரசியல் சார்ந்து அவசரகாலம் நினைவுகூரப்படுவது போல் இந்நாளின் முக்கியத்துவம் நம்மால் உணரப்படுவதே இல்லை .

சித்திரவதைகளை உணர்வதும் எதிர்ப்பதும் நம் பண்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் குறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சாதிப் படிநிலையில் தன் கீழுள்ள சாதிகளை மிதித்து துவைத்து அவமானப்படுத்தி சுகம் காணும் இயல்பு நம் நரம்போடு பின்னிப் பிணைந்துள்ளது.. சித்திரவைதைகளைக் கண்டும் காணாமல் மரத்துப் போன இதயத்தோடு கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ பழக்கப்பட்டிருக்கிறோம்.

”  துஷ்டனைக் கண்டால் தூர விலகு “,ஙப்போல் வளை “, “தானுண்டு தன் வேலை உண்டு என வாழ்வதே நல்ல பிள்ளைக்கு அழகு “,  “ஆமாம், இவரு சொல்லித்தான் விடியப்போகுதோ! ” இப்படி சொல்லிச் சொல்லி கூண்டுக்குள் கொடுமையை சகித்து வாழ்வதே உத்தமம் என நமக்கு உரைக்கப் பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இதன் நீட்சியாக பெண்களை இரண்டாந்தரப் பிறவிகளாகப் பார்ப்பதும் நடத்துவதும் ஆண்களின் உரிமை என்கிற ஆதிக்க உளவியலும் நம் சமூகம் நெடுக ஊறிப்போயுள்ளது.
இந்த சமூகத்தில்  ‘லாக்கப் டெத்’ எனப்படும்  ‘காவல் கொலையோ’ . அல்லது  ‘என்கவுண்டர்’ எனப்படும் ’மோதல் கொலையோ’ பொதுவாய் சமூகத்தின் பொதுபுத்தியில் குற்றமாகவே உறைப்பதில்லை.

 “குற்றம் செய்தவனை கொஞ்சவா முடியும் ? நாலு தட்டு தட்டாமல் எவன் உண்மையைச் சொல்வான் ?” இவை போன்ற உரையாடல்களை நாம் சமூகத்தில் தாராளமாய்க் கேட்கலாம்.

இந்த கரடுதட்டிப்போன சமூகத்தில் இருந்து சாத்தான்குள காவல் கொலைக்கு எதிராய் கோபம் கொந்தளித்திருக்கிறது எனில் நிலைமையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். 
கொரானா கால வெறுமையும் -வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கையறு நிலையும் – லத்தி மூலமே ஊரடங்கை அமலாக்க முனைந்ததும் – ஆக எல்லாமும் சமூக உளவியலை உலர்ந்த பட்டாசாய் ஆக்கி இருந்தது . சாத்தன்குளத்தில் வியாபாரிகளான தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டது அந்த பட்டாசில் நெருப்பை பற்றவைத்து விட்டது.

மனசாட்சியை அடகுவைக்காதோர் சாத்தான்குளத்தை தூர்வாரப் புறப்பட்டால் சவக்கிடங்கே அகப்படலாம் . ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் மீதான துப்பாக்கிச் சூடு ; அடிக்கடி தூத்துக்குடியில் சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கும் தொழிலாளர் மரணம் என செய்தியோடு மறக்கடிக்கப்படும். மோசமான  ‘நிர்வாக சாதித் திமிர்க் கொலை’ ; ஸ்டெர்லைட்டை சுற்றி மாசுபட்ட விஷமாக்கப்பட்ட காற்றாலும் நீராலும் சாகடிக்கப்பட்ட அப்பாவிகளின்  ‘ கார்ப்பரேட் கொலை’ என பேசு பொருள் நீளும் . இந்தக் கொலைகள் எதுவும் காவல் கொலைக்கு சற்றும் குறையாதவையே !

இப்படி தொடரும் கொலைகளின் இழப்புகளின் வலியும் வேதனையும் சகிக்க முடியாமல் வெடித்ததே இப்போதையப் போராட்டம் . 

அதற்கும் மேல் பிரண்டஸ் ஆப் போலிஸ் என்கிற முகமூடியில் காவல் துறைக்குள் ஊடுருவியிருக்கிற. ‘சேவா பாரதி’ என்கிற ஆர் எஸ் எஸ் மதவெறிக் குண்டர் படையின் கரசேவையும் கொலையில் சம்மந்தப் பட்டிருப்பதால் கோவம் அதிகரித்திருகிறது.

இந்நிலையில் உண்மை வெளிவருமா அல்லது இழுத்தடித்து ஊறப்போட்டு, மக்கள் ஞாபக அடுக்குகளின் கடைசிக்கு இச்செய்தி போய் புதைந்த பிறகு வழக்கு  மூடப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .

வாச்சாத்தி கூட்டுவன்புணர்வு  நூற்றுக் கணக்கானோர் மீதான தாக்குதல் , சின்னம்பதி வன்புணர்வு , சிதம்பரம் பத்மினியின் கணவர் நந்த குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு, தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு 17 பேர் சாகடிக்கப் பட்டது  போன்றவற்றில் நெடிய போராட்டம் நடத்தியே ஓரளவு நியாயம் பெற வேண்டி இருந்தது . இது அரசியல் கட்சிகளின் ஆக்கபூர்வமான நீதியின் பக்கம் நிற்கும் செயல்பாடு.

சிபிஎம், ஜனநாயக மாதர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம், இடது சாரிகள், மனித உரிமைப் போராளிகள், ஜனநாயக சக்திகள்  போன்றவற்றின் தொடர்ச்சியான போராட்டமின்றி நியாயம் கிடைத்து இருக்காது . இந்த வரலாற்றுண்மையை படித்து உணர வேண்டும். மறுபக்கம் அரசியல் தலைவர்கள் -சமூகவிரோதிகள் -காவல்துறை எனும் நச்சுக்கூட்டு பெரும் நாசத்தையும் அநீதியையுமே விளைவிக்கும். இது எதிர்க்கப்பட வேண்டும். களையப்பட வேண்டும். 

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அரசு கணக்குப்படியே முன்னூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையங்களில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் நெடிய வழக்குகளில் இதுவரை ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை. நீதித்துறை அந்த அளவு மனிதாபிமானத்தை கொன்று புதைக்கும் இடமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“ பட்டப் பகல் திருடர்களை பட்டாடைதான் மறைக்குது –ஒருபஞ்சையத்தான் திருடனென்றுஊருகூடி உதைக்குது …” என்கிற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் இன்றும் மெய்யானவை.

காவல் நிலையமோ நீதிமன்றமோ ஏழைக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் நீதியை மறுக்கும் பணக்காரணுக்குக்கும் மேல்சாதியினருக்கும் வாழையிலை போட்டு கேட்காமலே விருந்து படைக்கும். இது நாடெங்கும் அன்றாட அனுபவம் ஆகிவிட்டது.
இங்கு காவலர் புத்தியிலும் இந்த வர்க்க ,வர்ண ஆதிக்க இருட்டே அப்பிக்கிடக்கிறது. நியாத்துக்கான போராட்டம் நெடிது. 

அதில் ,1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டி.கே .பாசுவுக்கும் மேற்குவங்க அரசுக்கும் நடந்த வழக்கு ஒன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது , ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய 11 வழிகாட்டும் நெறிகளை வகுத்தளித்தது.

தமிழ்நாடு அரசும் அதனை ஏற்றுக் கொண்டு அறிவிக்கையாக வெளியிட்டது . மனித உரிமை ,பெண்ணுரிமை இவை குறித்து காவல்துறையினருக்கு பல மட்ட வகுப்புகளும் நடத்தப்பட்டன. நானும் சில வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுத்துள்ளேன். ஆனால் அவை எல்லாம்  ‘கேளாக்காதில் ஊதிய சங்கே!’.

காவல்துறை குற்றத்தை விசாரிக்க, வழக்கு தொடுக்க உரிமை படைத்த அமைப்பே தவிர “தண்டனை வழங்கும்” அமைப்பு அல்ல என்கிற புரிதல் அனைவருக்கும் வந்தாக வேண்டும் .

தீவிரவாதிகள் ,பயங்கரவாதிகள் என்கிற போர்வையில் கைது செய்யப்பட்டு ; ஊடகங்களால் கொடூரராய் சித்தரிக்கப்பட்டு ; ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் முஸ்லீம்கள் பலர் பத்து ,இருபது வருடங்களுக்கு பிறகு அப்பாவி என்றோ /தவறாக அடையாளம் காணப்பட்டதாகவோ விடுதலை செய்யப்படுவதும் ; அதனை நாலுவரிச் செய்தியாக ஏதோ ஒரு மூலையில் கூடப் போடாத  ‘ஊடக அறமே’ இங்கு கோலோச்சுகிறது.

உச்ச நீதிமன்றமும் கூட ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் காட்டிய அக்கறை – 1996 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு எதையும் இப்போது மதிக்கத் தயாரில்லை . கிட்டத்தட்ட நாக்பூர் [ ஆர் எஸ் எஸ் தலைமையகம் ] கண்ணசைவிற்கு ஏற்ப அவர்கள் மனம் கோணாமல்  – அவர்களின் விருப்பப்படி தீர்ப்பு வழங்கும் போக்கே இப்போதைய யதார்த்தம்.

காவல் துறை என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவியே என்பதை வரலாறு நெடுக நிரூபித்தே வந்திருக்கிறது . காவல்துறைக்கு மனித முகம் வழங்குவதாகச் சொல்லப்பட்ட எல்லா சீர்ந்திருத்தங்களும் பேச்சோடு முடிந்து போனது .நடைமுறையில் காவல் துறை மனிதமற்றதாகவே இருப்பதைக் காணலாம். காரணம் என்ன ? மாற்ற என்ன செய்யலாம்? 

1] அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் லட்சணம் அதுவே. அதில் மாற்றம் வராமல் மனித முகம் கிடைக்காது.

2] காவல் துறை வானில் இருந்து குதிக்கவில்லை அவர்களும் நம் வீட்டுப்பிள்ளைகளே . நம் பொது சமூகத்தில் நிலவும் சாதி வெறியும் மதப்பகைமையும் ,ஆணாதிக்கமும் காவலர் உள்ளங்களிலும் உறைந்து போயுள்ளது . அதை தூர்வாரி எறியும் பயிற்சி முறை கிடையாது ,மாறாக அந்த வெறுப்பை விசிறிவிடும் பயிற்சியே !

3] மோதல் கொலையோ காவல் கொலையோ உடனடியாக கொலை வழக்காகப் பதிவது அவசியம். விசாரணையும் வழக்கும் விரைந்து முடிக்கப்பட வேண்டியது அவசியம்.

4] காவல் கொலையோ /மோதல் கொலையோ அதனை நியாயப்படுத்தும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களை திருத்துவது சிரமம் .ஆனால் அவற்றுக்கு வெகுஜன ஆதரவு கிடைக்காது என்கிற சமூக உளவியலை நாம் பள்ளியிலிருந்தே கட்டமைக்க வேண்டும்.

5] மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். அது சாதி ,மத ,ஆணாதிக்க உணர்வுகளுக்கு எதிராக பொதுபுத்தியைக் கூர்மைப்படுத்தினால் நல்லது.

6] காவல் துறையில் அதிகார படிநிலை குட்டி ஜமீன் மனோபத்தையும்,எஜமான் அடிமை மனோநிலையையும் கொண்டிருப்தால் மேலே அதிகாரிகள் மேலுள்ள கோவத்தை பொதுமக்கள் மீது திருப்பும் உளவியல் வெடிப்பு தொடர்கதையே!அதிலும் பெண் காவலர் நிலை படுமோசம்.  ஆணாதிக்கத்தையும் சேர்ந்தே எதிர் கொள்ள நேரிடும். ஆனால் பெண் காவலரில் பலர் இந்த அடிமை மனோநிலையில் ஊறி – ஆண் காவலருக்குச் சற்றும் சளைக்காமல் பெண் காவலரும் ஆணாதிக்கதோடு நடந்து கொள்ளல் உண்டு.

7) அரசு ஊழியர் சர்வீஸ் ரெஜிஸ்டர் எனப்படும் பணிப் பதிவேட்டில் எல்லா விவரமும் இருக்கும்.  காவலருக்கு அத்துடன் குட்டி சர்வீஸ் டைரி ஒன்று இருக்கும்.  அதை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.  அதில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும். சாதி அடிப்படையில் காவலரைப் பயன் படுத்தும் பிரிட்டிஷ் நடைமுறை.  இது இன்னும் தொடரலாமோ?

8) காவலர் தம் குறைகளை வெளியிட முறையிட நியாயத்தைப் பெற சங்கம் அமைக்க முடியாது . காவலர் மன அழுத்தத்துக்கு உளவியல் போதனை மட்டுமே தீர்வல்ல . கொதிகலன் வெடிக்காமல் இருக்க ஷேப்டி வால்வாக ‘காவலர் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்’ . கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரிகளும் மட்டுமே இக்கோரிக்கையை ஆதரிக்கின்றனர் . சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஎம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் .பி.ரணதிவே எழுதிய “ காக்கி உடைக்குள் குமுறும் நெஞ்சங்கள்” எனும் சிறுபிரசும் இன்றும் பொருந்தும்.

வெறுப்பை மூலதனமாக்கி – மநுதர்மத்தை அறமாக்கி – பாசிசத்தை அமலாக்கிக் கொண்டிருக்கும் மோடிஷா , அவர்களின் குற்றேவலராய் இருக்கும் எடப்பாடி இவர்களின் ஆட்சிக்கு எதிராய் எழும் அரசியல் போராட்டமும் காவல் கொலை ,மோதல் கொலை ,சித்திரவதைக்கு எதிரான போராட்டமும் இணைந்தந்ததே .

சட்டம் ஒழுங்கு என்பது லத்தியோடும் அடி உதையோடும் மட்டுமே சம்மந்தப்பட்ட ஒன்றல்ல.. வயிற்றோடும் வாழ்வோடும் சமத்துவத்தோடும் சமூகநீதியோடும் பின்னிப் பிணைந்தது என்பதை உணராமல் ; உணர்த்தாமல் விடிவில்லை.
 “ மானுடம் என்பது புல்லோ – அன்றி மரக்கட்டையைக் குறிக்க வந்த சொல்லோ “ பாரதிதாசன் கவிதையின் சூடு எங்கும் பரவட்டும் !


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

7 thoughts on “சாத்தான்குளத்திலிருந்து தூர்வாரத் துவங்கலாமே….

 • இது காவல்துறை அல்ல காவி துறை

  Reply
 • ivanugalyum thukkula podauga

  Reply
 • சாத்தான்குளம் விவகாரத்தில் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன அவை வெளிவரவேண்டும்

  Reply
  • என்ன உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது ?கற்பனையில் பேசாதீர்கள்

   Reply
 • லூஸ்ஸா பயலுக சார் இவனுக

  Reply
 • நல்ல யோசனை ஆனால் அரசு ஒருபோதும் இதை செய்யாது

  Reply
 • காவல்துறை குற்றத்தை விசாரிக்க, வழக்கு தொடுக்க உரிமை படைத்த அமைப்பே தவிர “தண்டனை வழங்கும்” அமைப்பு அல்ல என்கிற புரிதல் அனைவருக்கும் வந்தாக வேண்டும் .// Very nice sir

  Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே