சாத்தான்குளம் சம்பவம் : அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் – நடிகர் சூர்யா கண்டனம்!

சாத்தான்குளம் தந்தை-மகன் மர்ம மரணத்திற்கு கோலிவுட் திரையுலகின் பலர் கண்டனம் தெரிவித்தபோதிலும், மாஸ் நடிகர்கள் யாரும் கருத்து சொல்லவில்லை என்ற நிலையில் தற்போது சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டு திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் போலீசாரின் லாக்கப் அத்துமீறல்கள் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என நடிகர் சூர்யா கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல்கள் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல்.

இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளனர்.

கொடூரமான மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 914 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே