சாத்தான்குளம் சம்பவம் லாக்கப் மரணம் கிடையாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு லாக் அப் மரணம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 19ம் தேதி இரவில் போலீசார் காவல் நிலையத்துக்கு விசாரணை கைதிகாளாக அழைத்து சென்றனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  அவர்கள்  இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22ம் தேதி இரவில் அடுத்தடுத்து மர்மமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தந்தை, மகன் உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என புகார் எழுந்ததை அடுத்து  சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கனவே ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இன்று, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் போட்டியளித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பு லாக் அப் மரணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக் அப் டெத் என்று சொல்ல முடியும். 2 பேரும் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே தந்தை- மகன் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தின் அறுவுறுத்தலின் படி இருவரின் உடற் கூறாய்வு நடைபெற்றதாக தெரிவித்தார்.

சாத்தான்குளம் விவகாரத்தை தேர்தல் வாக்குவங்கிற்காக செய்ய நினைத்தால் மக்களுக்கு உண்மை தெரியும்.

முதலில் காவ்துறையினர்  பணியிடை மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார்.

நீதிமன்றம் என்ன வழிமுறை சொல்கிறதே, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயாராக  உள்ளது என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே