சசிகலா குடும்பத்தினர் நடத்திவரும் 9 போலி நிறுவனங்களின் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சசிகலா குடும்பத்தினர் அறுபதுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின.
இதையடுத்து சசிகலாவின் உறவினர்கள் பினாமி உள்பட பலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயரில் நடத்தி வந்த 9 நிறுவனங்களுக்கு சொந்தமான ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.