அரசியலை விட்டு விலக போவதாக சசிகலா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இன்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்.

ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.

ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். நம் பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். 

என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சசிகலா பெங்களூரில் இருந்து சென்னை திரும்பி தி.நகர் இல்லத்தில் வசித்த இத்தனை நாட்களில் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மட்டும் தான் தொண்டர்களுடன் உரையாடினார்.

அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று, அவர் மறைமுகமாக அதிமுகவுடன் உறவை புதுப்பித்துக் கொள்ள சமிக்ஞையை கொடுத்தார். ஆனால் அது அதிமுக தரப்பினால் ஏற்கப்படவில்லை.

இதற்கு பிறகு அதிரடியாக அவர் தேர்தல் கோதாவில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. ஆனால் சசிகலா அமைதியாக இருக்கிறாரே என்று பலருக்கும் சந்தேகங்கள் ஏற்பட்டன.

டிடிவி தினகரன் மட்டும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை வழி நடத்தப்போவதாகவும், ஆனால் தலைவர் பதவி காலியாக இருக்கிறது என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

ஆனால், சசிகலா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை மறந்து கூட உச்சரிக்கவில்லை.

இந்த நிலையில்தான், திடீரென சசிகலா அரசியலை விட்டு விலகப் போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும்போது வழி நெடுகிலும் ஆதரவாளர்கள் சந்தித்துக் கொண்டே வந்தார் சசிகலா.

அப்படிப்பட்டவர் திடீரென யூடர்ன் அடிக்க பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மட்டுமல்ல.. கட்சிகளும் கெட்டிக்காரத்தனத்தை காட்டிவிட்டார். சசிகலா சென்னை வந்து இத்தனை நாட்களில் அதிமுகவின் இரண்டாவது கட்ட தலைவர்கள் கூட சசிகலாவை சென்று சந்திக்கவில்லை.

அதிமுகவில் பெரிய பிளவு ஏற்பட போகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் சிறு சலசலப்பு கூட ஏற்படவில்லை. அனைவரும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் பின்னால் ஓரணியில் நிற்கிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று கூறியவர்கள் உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்டவை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை நம்பி பின்னால் செல்வதற்கு பெரிய கட்சிகள் எதுவும் தயாராக இல்லை. மத்தியில் ஆளும் பாஜக அதிமுகவோடு தோளோடு தோள் கோர்த்து நிற்கிறது.

இப்படியான ஒரு தேர்தலில் 30 நாட்களுக்குள் சசிகலா எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று நம்புகிறார்.

அரசியலில் இருந்து பலரது பகையையும், தோல்வியையும் சம்பாதிப்பதை விட கௌரவமாக ஒதுங்கிக் கொண்டால், ஜெயலலிதா வழிநடத்திய கட்சி தன்னால் தோற்றது என்ற அவப்பெயர் ஏற்படாது.

தியாகத் தலைவி என்று தனது தொண்டர்கள் தன்னை அழைக்கும் பெயருக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துதான் சசிகலா இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்கிறார்கள்.

ஆனால், பாஜகவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணமும் சசிகலாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஏனெனில் சசிகலா மீது, இன்னும் நிறைய வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே