BoycottBBC #BanBBC ஆகிய இரட்டை ஹேஷ்டேக்குகள்தான் தற்போதைய ட்விட்டர் டிரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களைப் (இந்திய அளவில்) பிடித்திருக்கின்றன. பிபிசி நெட்வொர்க்கின் ஆசிய ரேடியோவில் ஒளிபரப்பான `Big Debate’ என்கிற விவாத நிகழ்ச்சிதான் இதற்குக் காரணம்.

என்ன நடந்தது?

கடந்த திங்கட்கிழமை அன்று பிபிசி ரேடியோவின் விவாத நிகழ்ச்சியில், `பிரிட்டனில், இந்தியர்களும் சீக்கியர்களும் இனவெறி பிரச்னைகளில் மோதிக்கொள்வது’ பற்றி விவாதிக்கப்பட்டது.

மூன்று மணி நேரம் நடந்த இந்த விவாத நிகழ்ச்சியில், சில அழைப்பாளர்கள் தொலைபேசியில் அழைத்து கருத்து தெரிவிப்பது வழக்கம்.

அதேபோல அன்றைய விவாத நிகழ்ச்சியிலும் சில அழைப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அதில் சைமன் என்ற பெயரில் பேசிய அழைப்பாளர் ஒருவர், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் குறித்துப் பேசினார். இறுதியாக, பஞ்சாபியில் சில வார்த்தைகளைக் கூறினார்.

தற்போது அவர் பஞ்சாபியில் பேசிய ஆடியோ பகுதிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பிபிசி நிறுவனத்துக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

பஞ்சாபியில் என்ன சொன்னார்?

அச்சிலேற்ற முடியாத மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னை பஞ்சாபியில் வசைபாடியிருக்கிறார் அந்த அழைப்பாளர்.

விவாத நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பியா ராய் இந்த நிகழ்ச்சியின் நடுவே, “நிகழ்ச்சிக்கு வந்த அழைப்பாளர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பலரும், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டுமெனவும், இந்தத் தகாத வார்த்தைகளை ஒலிபரப்பிய பிபிசி நிறுவனத்தைத் தடை செய்ய வேண்டுமெனவும் கொந்தளித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே