அதே டெய்லரா?? அதிமுக – திமுக விளம்பரங்களில் ஒரே பெண் – குழப்பத்தில் வாக்காளர்கள்..!!

தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒரே நபரின் படத்தை வைத்து போஸ்டர் வெளியிட்டு சண்டை போட்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும், அந்த கட்சியின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தலைவர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வந்தாலும், தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளங்கள் வாயிலாகவும் நடக்கும் டிஜிட்டல் பிரசாரம் அதி தீவிரம் அடைந்து வருகிறது.

அந்த வகையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

இந்த போஸ்டர்களின் மூலம் இரண்டு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டுக்குப் பிறகு, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் `வளரும் வாய்ப்புகள் வளமான தமிழகம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்த ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டிருந்தது.

அதில், ஒரு பெண்ணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பெண்கள் நலன்களை போஸ்டராகக் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியிட்டிருந்தது.

அந்த போஸ்டரில் தி.மு.க பயன்படுத்தியிருந்த அதே பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து எங்கள் தேர்தல் அறிக்கையைத் தான் காப்பி அடிக்கிறீர்கள் என்றால் போஸ்டரில் உள்ள பெண்ணின் புகைப்படத்தையுமா என்று தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள்.

தி.மு.க-வினருக்கு பதிலளிக்கும் வகையில், தி.மு.க பயன்படுத்துவதற்கு முன்னரே அந்த பெண்ணின் புகைப்படத்தை அ.தி.மு.க பயன்படுத்தியுள்ளது என்று கூறிவருகிறது. இப்படி இருவரும், ஒருவருக்கொருவர் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உண்மையில் அந்த பெண்ணின் புகைப்படமானது, புகைப்படங்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனமான shutterstock.com-முடையது, பணம் செலுத்தினால் யார் வேண்டுமென்றாலும் அந்த புகைப்படத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே நிதர்சனம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கஸ்தூரி பாட்டி “வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படித் தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்மா” என்ற ஒரு தி.மு.க விளம்பரத்தில் நடித்திருந்திருப்பார்.

அவரே அ.தி.மு.க-வுக்கு, “பெத்த புள்ள சோறு போடல, எனக்குச் சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்” என்று இன்னொரு விளம்பரத்திலும் நடித்திருந்திருப்பார். கடந்த தேர்தலில் போது இந்த வீடியோ பெரும் பேசுபொருளானது.

அதே போல, இந்த தேர்தலில் இந்த பெண்ணின் புகைப்படம் இரண்டு கட்சியினரும் பயன்படுத்தியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே