பிரியாணியையும் விட்டு வைக்காத தேர்தல் களம்..!!

பிரியாணி விற்பனைச் செய்யும் ஹோட்டல்களில் 100 பிரியாணி பொட்டலங்களுக்கு மேல் யாராவது ஆர்டர் கொடுத்தால் தகவல் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் ரகசியமாக வாய்மொழி தகவல் பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கட்சித் தலைவர்கள் பல இடங்களில் பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள்.

இதுபோன்ற தேர்தல் பரப்புகளின்போது தலைவர்கள் பேசுவதைக் கேட்கத் தொண்டர்கள் புடைசூழ்ந்து காணப்படுவது வழக்கமாகும்.

பல கிலோ மீட்டர் தூரங்களிலிருந்து அழைத்துவரப்படும் தொண்டர்களுக்குப் பிரச்சாரம் முடித்த செல்லும்போது உணவுக்காகப் பிரியாணி பொட்டலங்கள் வழங்குவது வாடிக்கையாகும். 

அதேபோல் ஒரு சில கட்சிகளில் மது பழக்கம் உள்ளவர்களுக்கு மதுபானம் வழங்குவதும் உண்டு.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணித்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாகப் பிரச்சாரங்களுக்கு அழைத்துவரப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் பிரியாணி பொட்டலங்களை வழங்குவதையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

பிரியாணிக்கு புகழ்பெற்ற வேலூர் மாவட்டத்தில் பல ஹோட்டல்களில் 100 பிரியாணி பொட்டலங்களுக்கு மேல் ஆர்டர் செய்யும் நபர்கள் குறித்து தகவல் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் ரகசிய வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளது.

இதன்காரணமாக தேர்தல் நேரத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களின்போது சுவையான பிரியாணி விற்பனை குறைந்துள்ளது.

பொதுவாகத் தேர்தல் காலத்தில் 500 முதல் 1000 பிரியாணி பொட்டலங்கள் பார்சல் செய்யப்பட்ட ஹோட்டல்கள் தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே