உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று நாகர்கோவில் வருகிறார்.

அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் பாஜக தற்போது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்களும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி சார்பாக கன்னியாகுமரி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் நிறுத்தப்பட உள்ளார்.

காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைவை தொடர்ந்து இங்கு இடைதேர்தல் நடக்க உள்ளது. இதில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார்.

இதை முன்னிட்டு இன்று உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தமிழகம் வருகிறார். நாகர்கோவிலில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காகவும், கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வதற்காகவும் இவர் தமிழகம் வர உள்ளார்.

நேற்று கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வருகிறார்.

ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வரும் அமித் ஷா இன்று சுசிந்திரத்தில் உள்ள கோவில்களுக்கு செல்கிறார். சுசிந்திரம் பெருமாள் கோவில் உட்பட பல கோவில்களில் வழிபாடு நடத்த உள்ளார்.

இதையடுத்து காலை 11 மணிக்கு அமித் ஷா பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் கேரளாவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ள செல்ல இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே