பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்!

இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரமான சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார்.

ஹரியானாவில் பிறந்த சாய்னா தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி மற்றும் வெற்றிகரமான பேட்மிண்டன் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். அவருக்கு வயது 29.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங்கை சந்தித்து தன்னை பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

அவர் மட்டுமல்லாது அவரின் மூத்த சகோதரியுமான சந்திரன்ஷுவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

உலகின் 9ம் நிலை வீராங்கனையாக திகழ்ந்து வரும் சாய்னா நேவால் திடீரென பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (2015) மற்றும் வெண்கலம் (2017), இரண்டு முறை காமன்வெல்த்தில் தங்கம் என ஏராளமாக பதக்கங்களை குவித்துள்ளவர் சாய்னா நேவால்.

தனது பேட்மிண்டன் வாழ்வில் அதிகபட்சமாக 2015ல் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உயர்ந்தவர் சாய்னா நேவால்.

பிரகாஷ் படுகோனேவிற்கு பிறகு உலகின் முதல் நிலை வீரராக சாதனை படைத்தவர் சாய்னா மட்டுமே.

இந்தியாவின் 2வது உயரிய பத்ம பூஷண் விருதினை 2016ல் பெற்றவர் சாய்னா. மேலும் ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளையும் சாய்னா பெற்றுள்ளார்.

முன்னதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், வீரர் யோகேஸ்வர் தத், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே