தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 65 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் குடியாத்தம் காத்தவராயன், திருவெற்றியூர் கே.பி.பி.சாமி ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரியில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
ஜூன் மாதம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன், கரோனா தாக்கத்தால் உயிரிழந்தார்.
இதனால் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கண்ட 3 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. இறந்துபோனால் அந்தத் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த வகையில், குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் தொகுதிகளுக்கு ஆகஸ்டிலும், திருவல்லிக்கேணிக்கு டிசம்பரிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கரோனா தொற்று சூழலில் ஆகஸ்ட் மாதத்தில் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்தநிலையில் பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மொத்தம் 65 காலி இடங்கள் தற்போது உள்ளன.
இவற்றில் 64 காலி இடங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் உள்ள நிலையில், ஒரு காலி இடம் நாடாளுமன்றத்தில் உள்ளது.
இந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வந்திருந்த அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் ஆய்வு செய்தது.
பெரும்பாலானவர்கள் கனமழை மற்றும் பெருந்தொற்றின் காரணமாக தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தல்களைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை 29 நவம்பர், 2020-க்குள் நடத்தி முடிக்கவேண்டியிருப்பதால், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையும், 65 தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்தது.