கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்பன் கோயில்களில் திரளான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு ஐயப்ப சரணம் பாடி மண்டல பூஜையை தொடங்கி உள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் அதிகாலை மூன்று முப்பது மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது.

நெய், தேன், பால் உள்ளிட்ட 9 அபிஷேகப் பொருட்களால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் குருசாமி 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

அண்ணாநகரில் உள்ள ஐயப்பன் சுவாமி கோவிலிலும் திரளான சிறுவர்கள் கன்னிசாமிகள் மாலை அணிந்து கொண்டனர்.

கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு குருசாமியின் கையால் மாலையை அணிந்து கொண்டனர்.

விருத்தாச்சலம் மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் திரண்ட பக்தர்கள் ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு எட்டு நாள் மண்டல பூஜையை தொடங்கினர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சபரிமலைக்கு செல்ல விருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.

ஐயப்பசுவாமி சீசன் தொடங்கி உள்ளதால் பூஜை பொருட்கள் கடைகளில் விற்பனை தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் முக்கூடலில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மன் கோவிலில் மாலை அணிந்து கொண்டனர்.

குருசாமியிடம் மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள் ஐயப்ப சரணம் என கோஷமிட்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடலில் நீராடி ஐயப்ப சுவாமியை வேண்டி மாலை அணிந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே