ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பார்வையிட்டதுடன், மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, உடனடி நிவாரணப் பணிகளுக்காக ஆயிரம் கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயல் மழை வெள்ளப் பாதிப்புக் குறித்து புவனேசுவரத்தில் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் மாநிலத் தலைமைச் செயலாளர் கலந்துகொண்டு புயலால் விளைந்த சேதங்களை எடுத்துரைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அதன்பின் ஒடிசாவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பத்ராக், பாலேஸ்வர், கிழக்கு மேதினிப்பூர் மாவட்டப் பகுதிகளைப் பார்வையிட்டார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் சென்றார்.
மேற்கு வங்கத்தின் கலைக்குண்டா விமானத் தளத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 15 நிமிடங்கள் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிவாரணப் பணிகளுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்பின் தான் மற்றொரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டியுள்ளதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
புயல் பாதித்த மாநிலங்களில் உடனடி நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். இதில் ஒடிசா மாநிலத்துக்கு 500 கோடி ரூபாயும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்குச் சேர்ந்து 500 கோடி ரூபாயும் வழங்கப்படும். புயல் மழை வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாயும் காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழுவினர் சென்று சேதங்களை மதிப்பிட்ட பின் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.