காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழல் காரணமாக ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாத ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அவ்வப்போது பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில், முக்கிய பயங்கரவாத அமைப்பின் 9 தளபதிகள் உட்பட 30க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள முனாந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரில் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் இன்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனை அடுத்து பதுகப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மசூதிக்குள் தஞ்சம்:

இதேபோல் தெற்கு காஷ்மீரின் பாம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ஒரு பயங்கரவாதியையும் அங்குள்ள மசூதிக்குள் நுழைந்த இரண்டு பயங்கரவாதிகள் என மொத்தம் 3 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இப்பகுதியிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே