ரூ.2650 கோடி சாலை டெண்டர் ரத்து…; டிடிவி தினகரன் வரவேற்பு..!!

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (அக். 10) தன் ட்விட்டர் பக்கத்தில், “கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி அரசு விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது.

இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கெனவே ஆளாகியிருக்கிறது பழனிசாமி அரசு.

குறிப்பாக, அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளானதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே