வேல் யாத்திரையால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

பள்ளி, கல்லூரிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளிவைப்பதில் எந்தத் தவறுமில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்புகள் நவ.16-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

தொற்றுப் பரவலுக்கு இடையே பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி அருகே தேமுதிக தொண்டர்களைப் பிரேமலதா சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ”அதிமுக கூட்டணியில்தான் தற்போது வரை தேமுதிக உள்ளது. கட்சி வளர்ச்சிக்காகவே வேல் யாத்திரையைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.

பள்ளி, கல்லூரிகளின் திறப்பைத் தள்ளிப் போடவேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதுதான் எங்களுடைய கருத்தும்.

ஏனெனில், கரோனா தொற்றின் தாக்கத்தை விஜயகாந்தும் நானும் நேரடியாகவே உணர்ந்துள்ளோம். இதில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் முக்கியம்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பை 4 மாதங்கள் தள்ளிவைப்பதில் எந்தத் தவறுமில்லை. நமக்குத் தேவை குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு என்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைப்பதுதான் சரி” என்று பிரேமலதா தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே