தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்பட நான்கு மாவட்டத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாகவும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடம்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14-ம் தேதி உருவாகக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வேப்பூர் 13 செ.மீ மழையும், ஓகேனக்கல், மதுரை 8 செ.மீ மழையும், ராசிபுரம் தலா 7 செ.மீ மழையும், மேலூர், சிவகங்கை, நிலக்கோட்டை, தல்லாக்குளம், சோழவந்தான், சூலகிரி, வீரகனூர் தலா 6 செ.மீ மழையும், எடப்பாடி, புலிப்பட்டி, திருபுவனம், மங்களாபுரம், பென்னாகரம், பரமக்குடி தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே