பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி கத்திமுனையில் கொள்ளை..!!

திண்டிவனத்தில் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.32 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மரக்காணம் சாலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ஓரம் உள்ள டிகேபி பெட்ரோல் பங்கில், ஞாயிற்றுக்கிழமை இரவு புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (24), எறையானூர் பகுதியைச் செந்தில்(38), ஆகியோர் இரவு பணியில் இருந்தனர்.

அப்போது திங்கள்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் பைக்குக்கு ரூ.500 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கூறி உள்ளனர். 

அப்போது சுரேஷ் பெட்ரோல் போட்டு கொண்டு இருக்கும் போது அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.30 ஆயிரம் பணத்தையும் மற்றும் உள்ளே இருந்த செந்திலிடம் இருந்த ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குரங்கு குல்லா அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெட்ரோல் பங்க் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திண்டிவனத்தில் பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் 32 ஆயிரம் ரூபாய் பறித்தச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே