வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – பிரதமர் மோடி உறுதி..!!

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார்.

அப்போது கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும், எடுத்த நடவடிக்கைகள், தடுப்பு முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசியதாவது:

போலியோ, சின்னம்மை போன்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்களையும், பெருநோய்களையும் இந்தியா சந்தித்திருக்கிறது. 

இந்தியா மிக்பெரிய நாடு, மக்கள் அனைவருக்கும் எவ்வாறு தடுப்பூசி கிடைக்கும், இந்தியாவால் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியுமா என யாருக்கும் தெரியாது.

ஆனால், கரோனா பாதிப்பு ஏற்பட்ட ஓர் ஆண்டுக்குள் இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளது.

இதில் 2 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

உலகத்துக்காக தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வருகிறது. இது நமது தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறது.

கரோனா காலத்தில் நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவம், கூட்டுறவு கூட்டாட்சி மேலும் வலிமை அடைந்துள்ளது.

இந்தியா மருந்து நிறுவனங்களின் மையமாக இருந்து வருகிறது. 150 நாடுகளுக்கு நாம் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி போடும் முகாமை இந்தியா நடத்தி வருகிறது.

கண்களுக்குத் தெரியாத எதிரியானா கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள்கூட ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடியாத நிலை முதலில் இருந்தது.

இந்த சூழலைப் பார்த்த உலகம், இந்தியா எவ்வாறு கரோனா பிரச்சினையை சமாளிக்கப்போகிறது என்று அச்சமும், கவலையும் அடைந்தது.

கடவுளின் ஆசிர்வாதத்தால், நாம் கரோனா வைரஸ் பிரச்சினையை சிறப்பாகக் கையாண்டோம். கரோனாவுக்கு எதிரானப் போரில் வென்றதன் பலன், பெருமை அனைத்தும் தேசத்தின் மக்களுக்கே சேரும்.

எந்த தனிநபருக்கும், அரசுக்கும் சேராது.

கோடிக்கணக்கிலான மக்கள் கரோனாவில் பாதிக்கப்படுவார்கள், லட்சக்கணக்கில் உயிரிழப்பார்கள் என்றெல்லாம் கணிக்கப்பட்டது.

ஆனால்,அனைவரின் அச்சங்களையும் இந்தியா தவறு என நிரூபித்துவிட்டது.

இந்தியா உலகிற்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பியதைப் பார்த்து மனிதநேயத்தை உலகம் புகழ்கின்றது.

இந்த பெருமை தனிநபருக்கோ, அரசுக்கோ அல்ல, இந்தியாவுக்குத்தான். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் நாட்டின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருக்கக்கூடாது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு எப்போது இல்லாத வகையில் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும், இது சாதனை அளவு என்றும் அவர் கூறினார். தற்போது நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நாடாக இந்தியா இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வேளாண் சீர்திருத்தங்கள் பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் வேளாண் சீர்திருத்தங்கள் கட்டாயம் தேவை என தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனக் கூறியதோடு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் நடைமுறை தொடரும் என்றும், அந்த முறை எப்போதும் கைவிடப்படாது என்றும் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே