ஒருவழியாக கைதான கொள்ளையன் : மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்..!

திருச்சி நகைக்கடை கொள்ளையில் பெருமளவு நகைகள் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் காவலர்கள் இருவர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் சுவரில் துளையிட்டு 470 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த திருவாரூர் முருகனே, பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு கொள்ளை வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதே போல இரு கொள்ளைகளிலும் தொடர்புடைய சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைய, கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் என்பவரும் சிக்கினார்.

கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு சிக்கியதை அடுத்து காவலர்கள் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் சமயபுரம் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே