பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஓபிஎஸ்-ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.
அதிமுகவில் பெருந்துறை தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாச்சலம். அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார். பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை
டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாகத் தனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என தோப்பு வெங்கடாச்சலம் எதிர்பார்த்தார். எந்த மாற்றமும் வரவில்லை. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருந்துறை தொகுதியில் போட்டியிட மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்தார். ஆனால், தொகுதியில் மூத்த அரசியல்வாதியான அவருக்கு அதிமுகவில் சீட் வழங்கவில்லை.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு சீட் வழங்காதது குறித்து ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய தோப்பு வெங்கடாச்சலம், “நான் என்ன தவறு செய்தேன், கட்சிக்காக உழைத்த என்னை கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டார்களே’ என கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்த தொண்டர்களும் அழுதனர்.
இதையடுத்து, தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து, நேற்று மதியம் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அவர்கள் இன்று (மார்ச் 19) வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் அதிமுக கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ, இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அதிமுக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.