மனு தாக்கலின்போது தேர்தல் விதிமுறையை பின்பற்றாமல், திருப்பூர் தெற்கு தொகுதி அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் மற்றும் தொண்டர்களை போலீஸார் தடுத்ததால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் தெற்குதொகுதி வேட்பாளராக முன்னாள் மேயர் அ.விசாலாட்சி போட்டியிடுகிறார். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக, தெற்கு தொகுதி மனு தாக்கல் செய்யும் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, 100 மீட்டருக்கு முன்பாக வேட்பாளர் மற்றும் இருவர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு. ஆனால், அங்கு கூட்டமாக வந்த அமமுகவினர், மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீஸார் முயன்றதால், இருதரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, வேட்பாளர் மற்றும் அவருடன் இருவரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, “தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அமமுகவினர் மொத்தமாக திரண்டு போலீஸாருடன் தள்ளு, முள்ளு செய்து, லேசான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் தெற்கு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றனர்.