மீண்டும் கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் மும்பை தாராவி: 6 மாதங்களுக்கு பிறகு நெருக்கடி

நாடுமுழுவதும் கரோனா பரவல் பெரிய அளவில் இருந்தபோது பெரும் பாதிப்பை சந்தித்த மும்பையின் தாராவி பகுதியில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனாவை உரியமுறையில் கட்டுப்படுத்த மாடல் பகுதியாக இருந்த தாராவி 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக மும்பையில் கரோனா பரவல் தொடர்ந்த அதிகரித்து வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர் பெற்ற தாராவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தபோது ‘ஹாட் ஸ்பாட்’ என்ற அளவுக்கு தாராவி சென்றது.

ஆனால் வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தாராவியில் வசிக்கும் மக்கள்முழு ஊரடங்கு கடைபிடித்ததும், பரிசோதனைக்கு பெரும்பாலானோர் ஒத்துழைப்பு அளித்ததும் தாராவியில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு தாராவி ஒரு ‘மாடல்’ பகுதியாக கூறப்பட்டது.

இந்தநிலையில் தாராவியிலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக இரட்டை இலக்கத்தை தொட்ட தொற்று எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீ்ண்டும் செப்டம்பர் மாத நிலவரத்தை தொட்டுள்ளது.

இந்தநிலையல் தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டள்ளது. தற்போது அங்கு 140 பேர் சிகிச்சையில் உள்ளனர். தாராவியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4328 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தாராவியில் கரோனா தொற்று எண்ணிக்கை 33 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை அதே அளவை தொட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே