காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

இந்திய முஸ்லீம்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த, காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெராஹிட் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, குடியுரிமை சட்டம் எந்த இந்தியரின் உரிமையை பறிக்காது என்றும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமே நமது புனித நூல் என்றும், கல்லூரி மாணவர்கள் நமது கொள்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும்; ஜனநாயக முறையில் மட்டுமே போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் மோடி குறிப்பிட்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது. இந்தப் புதிய சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமகன்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாப்பதற்காகத்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வருவோம் என்றும்; ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்திய குடியுரிமை வழங்குவோம் என்றும்; காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும், பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா? என்றும் பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்தார்.

மாணவர்களின் கருத்தறிய தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆனால் சில கட்சிகளும் நகர்ப்புற நக்சலைட்டுகளும், மாணவர்களுக்கு தவறாக வழிகாட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே