ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனில் அம்பானி அளித்த கடிதத்தை ஏற்க மறுத்துள்ளது அந்நிறுவனம்.
அனில் அம்பானி உடன் இயக்குநர்களாக பதவி வகித்த நால்வர் ரைனா கரானி, சய்யா விரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்படவில்லை.
ரிலையன்ஸ் கம்ப்யூனிகேஷன்ஸ் க்ரெடிட்டர் கமிட்டி ஒரு மனதாக இந்த ராஜினாமா கடிதங்களை ஏற்கப்போவதில்லை என்ற முடிவை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனில் அம்பானி உட்பட இயக்குநர்கள் நால்வரும் தங்களது பதவிகளில் தொடர்ந்து பணியாற்றி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 30,142 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தாகக் கூறியுள்ளது.
இந்தியாவின் பெரும் நிறுவனங்கள் இதுபோல் அதிகப்படியான நஷ்டத்தைச் சந்திப்பது இது இரண்டாம் முறை.
சில மாதங்களுக்கு முன்னர்தான் வோடபோன் நிறுவனம் 50,921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.