கொரோனா தடுப்பு நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் நிவாரண நிதியின்கீழ் கரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய – மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு? பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மையைப் பேணும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி இணையதளத்தில், பொதுமக்கள் அறிந்துகொள்ள, இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர், மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும்; ஆனால் தமிழகத்தில்தான் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்ற கேள்வியை முன்வைத்தனர்.

மேலும், இதுகுறித்து உரிய பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது.

முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் யார் யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது குறித்தான முழு விவரத்தை தமிழக அரசின் இணையதளத்தில் எட்டு வார காலத்திற்குள் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே