ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு- தமிழக போலீஸார் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக போலீஸார், புகார்தாரர் 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த கருத்தரங்கில் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பட்டியல் இனத்தவருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

தனக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரியும், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு கடந்தமாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திரபட் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, ‘‘குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக மனுதாரர் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதுதொடர்பாக தமிழக போலீஸார், புகார்தாரர் 2 வாரங்களில் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே