RECENT NEWS : கட்சியும் குடும்பமும் உடைகிறது- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகள் சுப்ரியா சுலே குடும்பத்திலும், கட்சியிலும் பிளவு என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும், பாஜக-வும் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.

ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் கொடுத்தார்.

இந்நிலையில், இன்று காலை சுப்ரியா சுலேவின் உறவினரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மிகவும் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதில் கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.

இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும், சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது.

அதை மறுக்கும் சரத் பவார்,

  • அஜித் பவார் மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும்.
  • இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே