மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் தங்கள் வாழ்வாரத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திமுக சார்பில் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்ட வாக்குறுதியில், “மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு இரண்டுமாத கணக்கீட்டிற்கு பதிலாக, மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில், “கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது தற்போது இல்லை.

டிஎன்பிஎல் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

ஆனால் இத்தாலியிலிருந்து இயந்திரங்கள் வர தாமதமானதால் ஆக்சிஜன் தயாரிக்க ஜூன் இரண்டாவது வாரமாகிவிடும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு என்பது படிப்படியாக அமலுக்கு வரும்.

திமுக அறிக்கையில் குறிப்பிட்டவாறு தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே