ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். சிறை பிடிக்கப்பட்டுள்ள விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற 29-ந்தேதி இந்தியா வரும்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது. 720-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ரூ.1 கோடி அளவிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே