பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடந்து வந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 580 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 340 ரன்கள் முன்னிலை பெற்றது. டேவிட் வார்னர் 154 ரன்களும் லபுஸ்சேக்னே 185 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷகின் ஷா அப்ரிதி, ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

சிறிது நேரம் தாக்குப் பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 42 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து பாபர் அசாமுடன் இணைந்தார் முகமது ரிஸ்வான். இருவரும் நிலைத்து நின்று போராடினர். சதம் அடித்த பாபர் 104 ரன்களிலும் ரிஸ்வானும் 95 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த யாசிர் ஷா 42 ரன்கள் சேர்த்தார். வேறு யாரும் நின்று ஆடாததால், 335 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *