ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் : ஆர்.எஸ்.பாரதி

முரசொலி அலுவலக நிலம் குறித்து அவதூறு பரப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

முரசொலி அலுவலக நிலம் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரமுகர் சீனிவாசன் மீது திமுக சார்பில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் குறித்து அவதூறாக பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாகவும்; அதில் 83 ஆண்டுகளுக்கான முரசொலி நிலத்தின் பட்டா மற்றும் மூலப்பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

அவர்கள் இருவரும் கௌரவம் மற்றும் ஆணவம் பார்க்காமல் தங்களது கருத்துக்கு மன்னிப்புக் கோரினால் திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியோடு அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே