BREAKING NEWS : உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை!

உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ.குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வீட்டு வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பன வழக்கில் குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜுலை மாதம் பாதிக்கப்பட்ட பெண் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கு, விபத்து வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிபிஐ மற்றும் எம்எல்ஏ தரப்பு வாதங்களும் டிசம்பர் 9 நிறைவடைந்து.

இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி எம்.எல்.ஏ. செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் அபராத தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.

பா.ஜ.க. சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே