கடந்த 2002-2003ம் நிதியாண்டில் 6 பேருக்கு 2 கோடியே 63 லட்சம் ரூபாயை கடனாக வழங்கியதாகவும்; இதன்மூலம், ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது.

வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், நிகர வருமானமான ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும்; இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

ஆனால், இதனை கடன் கொடுக்கும் தொழிலாக கருத முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடன் கொடுத்ததை தொழிலாக கருத முடியுமா? என்று கேட்டபோது, தான் இதனை தொழிலாக செய்யவில்லை என்றும்; தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று வழக்கை கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே