சீனாவில் கொரோனா வைரஸ்-ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ள நிலையில், வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீனாவில் மட்டும் 6 ஆயிரத்து 78 பேருக்கு இந்த நோய் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 நாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது.
ஊஹான் உள்ளிட்ட17 நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு சீன அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸை சாத்தான் என்று குறிப்பிட்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தப் போரில் வெற்றிபெறுவதற்கு தங்களது பங்களிப்பை அளிக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பணியில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சீனாவுக்கு செல்லும் ரயில் சேவையை ஹாங்காங் நிறுத்தியுள்ளது.
இதேபோல, படகு சேவையும் நிறுத்தப்பட்டதுடன், ஏராளமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சீனாவில் கரோனா தீவிரமடைந்துள்ள பகுதிகளிலிருந்து தங்களது நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்கர்கள் 201 பேருடன் சிறப்பு விமானம், தெற்கு கரோலினாவுக்கு வந்துசேர்ந்தது.
விமான படை தளத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள், கடும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஊஹானில் தவித்துவரும் தமிழக மாணவர்கள், தங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஹூபேய் மாகாணத்திலிருந்து இந்தியர்களை அழைத்துவருவதற்காக இரண்டு விமானங்களை இயக்க அனுமதிக்குமாறு சீன அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீன அரசுடன் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் பேசிவருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை முகாமை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட 68 பேரை அவர்களது வீடுகளிலேயே வைத்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.
இதனிடையே, மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் வகையில், மிகப்பெரும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா சென்று அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு ஸ்விட்சர்லாந்து திரும்பிய உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குநர் மைக்கேல் ரியான், ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சீனாவில் பயின்றுவந்த இலங்கையைச் சேர்ந்த 110 மாணவர்கள், நேற்று தாயகம் திரும்பினர்.
இதுவரை 380 மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், இன்னும் 484 மாணவர்கள் சீனாவில் இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.