அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியும், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார் நடிகர் அஜித்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி தொடங்கிவிட்டது.

ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் அரசுக்கு பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. இதிலிருந்து மீள மத்திய மாநில அரசுகள் நிதி உதவி அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர். 

டாடா குழுமம் ரூ.1500 கோடி வழங்கி உள்ளது.

திரைப்பிரபலங்களில் அக்ஷ்ய் குமார் 25 கோடி வழங்கி உள்ளார். பிரபாஸ் ரூ.4 கோடி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு தலா ரூ.1 கோடி, பவன் கல்யாண் ரூ.2 கோடி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்துள்ளனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் சிவகார்த்திகேயன் தவிர்த்து வேறு யாரும் நிதி உதவி அளிக்கவில்லை.

ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் எல்லாம் அமைதி காத்து வந்தனர். இவர்களில் ரஜினியாவது தங்கள் சினிமா சார்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி அளித்தார்.

ஆனால் விஜய், அஜித் அதற்கு கூட உதவவில்லை.

மக்களின் செல்வாக்கால் உயர்ந்து மக்களால் புகழ்பெற்ற நடிகர்கள் இந்த காலக்கட்டத்தில் கூட உதவாமல் இருந்தால் எப்படி என இவர்கள் மேல் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் உதவ முன் வந்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலாளர்களுக்கு தனியாக ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடி நிதி உதவி அளிக்கிறார்.

இதை அவரது வங்கி கணக்கு மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைத்துள்ளார்.

எந்த ஒரு பொது நிகழ்விலும், ஏன் தான் சார்ந்த சினிமா விழாக்களுக்கு கூட வராத அஜித், உலகில் என்ன நடந்தாலும் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். அவரே நிதி அளிக்க முன் வந்துவிட்டார்.

ஆனால் எல்லா பொது நிகழ்விலும் பங்கேற்று, தன் பட விழாக்களில் அரசியல் தொடர்பாக பரபரப்பாக பேசி, அதையே படத்திற்கு விளம்பரமாகவும் பயன்படுத்தி கொண்டு, மக்கள் மத்தியில் தன்னை பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்பவரும், எதிர்காலத்தில் பெரிய அரசியல் கனவோடு இருப்பவருமான விஜய், எப்போது உதவ போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே