பிகில் வரி ஏய்ப்பு : நடிகர் விஜயிடம் 2வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை…!

பிகில் திரைப்பட தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்த புகார் தொடர்பாக, நடிகர் விஜய்-யிடம் வருமானவரித் துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படத்தை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தயாரித்திருந்தது.

பிகில் படத்தின் தமிழ்நாடு உரிமத்தை சுமார் 72 கோடிக்கு வாங்கிய ஸ்கீரின் சீன் என்ற நிறுவனம் சுமார் 85 கோடிக்கு டிஸ்டிபியூட்டர்களுக்கு விற்பனை செய்தது.

ரிலீசுக்கு முன்பே, தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், திரையரங்கு உரிமம், ஆடியோ உரிமம் என மொத்தமாக 200 கோடியை பிகில் படம் ஈட்டியது.

இது மட்டுமில்லாமல் இப்படத்தின் திரையங்க டிக்கெட் வசூல் 300 கோடியை தாண்டியது.

இப்படி பல சாதனைகளை செய்த பிகில் திரைப்படத்தின் வரவு செலவு கணக்கில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனையில் இறங்கியது.

தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்து வரும் பைனான்சியர் அன்புச்செழியன் பிகில் திரைப்பட தயாரிப்புக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

பிகிலை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ், நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய 35 இடங்களில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் சினிமாஸ் அலுவலகம் மற்றும் கல்பாத்தி அகோரம் குடும்பத்தாரின் வீடுகள், அன்புச்செழியனின் வீடு, அலுவலகம், நடிகர் விஜயின் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, நண்பர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது.

பிகில் திரைப்பட தயாரிப்பின் பின்னணியில் உள்ள வரவு செலவு கணக்கு, பணப்பரிவர்த்தனைதான் சோதனையின் அடிப்படை என்கிறது வருமானவரித்துறை.

பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், நடித்த விஜய் – மூன்று தரப்பும் தாக்கல் செய்த வருமானவரி ஆவணங்களை ஆய்வு செய்த வருமானவரித்துறை அதில் இருந்த முரண்களை அடிப்படையாக வைத்தே இந்த சோதனையை வடிவமைத்துள்ளது.

மூவரும் முறையாக வரி செலுத்தவில்லை என்பதும், பணபரிவர்த்தனையில் கருப்பு பணம் இருந்ததாகவும் வருமானவரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடந்து வருவதாகக் கூறுகின்றனர் அதிகாரிகள்

பிகில் திரைப்படத்தில் நடித்ததிற்கு நடிகர் விஜய் சுமார் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.

அன்புச்செழியன் அலுவலகம், ஏ.ஜி.எஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் நடந்த சோதனையில், பிகில் படத்திற்கு விஜய் சம்பளம் பெற்றது தொடர்பான முக்கிய ஆவணம் சிக்கியது.

அதன் அடிப்படையில், நெய்வேலி, என்.எல்.சி அருகே மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

படப்பிடிப்பு தளத்தில் விசாரணை செய்யமுடியவில்லை என்பதால், அங்கிருந்து அழைத்துச்சென்று அவரை கேரவேனில் வைத்து 5 மணி நேரம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நடிகர் விஜயின் குடும்பத்தினர் நிர்வகிக்கும் வங்கி லாக்கரை திறந்து ஆய்வு மேற்கொள்ளவும் வருமானவரித்துறையினர் முயற்சி செய்துவருவதாக கூறப்பட்டது.

விஜயின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்தின் நிர்வாகி அர்ச்சனா கல்பாத்தியிடமும், பைனான்சியர் அன்புச்செழியனிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய சோதனையில் AGS சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கணக்கில் வரவு வைக்கப்படாத ஏராளமான தங்க நகைகளும் சிக்கியுள்ளதாகவும், ரொக்கம், நகை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

பணையூரில் உள்ள விஜயின் இல்லத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே