வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.
குறிப்பாக நுங்கம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை,பட்டினப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரமாக தொடர் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் ஓடியது.
ராயப்பேட்டை அருகே கனமழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. 2 மணி நேரம் ஆகியும் மரம் அகற்றப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக மழை பொழிந்து வரும் நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பொழிந்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில தினங்களாக கோவையில் லேசான மழை பெய்து வந்த நிலைகள் காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்ததால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சாலையில் தேங்கும் மழை நீர் வடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றன.
அதேபோல் புதுத் தெருவில் உள்ள வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் புகுந்த வெள்ள நீரால், வணிக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி வியாபாரிகளும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.