காப்பீட்டுத் தொகை காக வளர்ப்பு மகனை திட்டமிட்டு கொலை செய்த லண்டன் தம்பதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பண ஆசையால் கொலைகாரர்களாக ஆகி இருக்கிறார்கள் லண்டன் தம்பதியினர்.
லண்டனைச் சேர்ந்த தம்பதியின் பண ஆசைக்கு ஒரு பாவமும் அறியாத சிறுவனின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது.
அதற்காக உலக சினிமாக்களை மிஞ்சும் வகையில் அவர்கள் தீட்டிய சதித் திட்டம் அம்பலமாகியிருக்கிறது.
குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட தம்பதி இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர்.
2015 ஆம் ஆண்டு குஜராத்துக்கு வந்த இந்த தம்பதி சிறுவனை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
அதைக்கண்டு கோபால் சினார்ஜி என்ற 11 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொண்டு இருக்கின்றன. அந்த விளம்பரம் கொடூரர்களின் சதிவலை என்று அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
பெற்றோரை இழந்த கோபால் சினார்ஜி மூத்த சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். தங்களுடன் வறுமையில் வாழ்ந்து வரும் கோபால் சினார்ஜியை லண்டன் தம்பதிக்கு தத்து கொடுத்தார் அவரது சகோதரி.
சிறுவனை முறைப்படி தத்து எடுத்த லண்டன் தம்பதி, சில நாட்களிலேயே அவர் மீது ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள்.
எல்லாம் சுமூகமாக முடிவடைந்துவிட்ட நிலையில், இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறது.
சிறுவனைத் தத்தெடுத்த தம்பதியர் உறுதி அளித்ததன்படி அவரை லண்டனுக்கு அழைத்து செல்லவில்லை. சில முன்னேற்பாடுகளை செய்த பின்னர் சிறுவனை தங்களோடு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு லண்டன் சென்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த கோபால் சினார்ஜி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குத்தி கொலை செய்யப்பட்டார். அதை தடுக்க வந்த உறவினரும் தடுக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதாலேயே லண்டன் தம்பதியர் திட்டமிட்டு சிறுவனை கொலை செய்து உள்ளனர்.
பணத்துக்காக லண்டன் தம்பதி தங்களது நண்பர் மூலம் கூலிப்படையை ஏவி சிறுவனை அநியாயமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணைக்காக லண்டன் தம்பதியை நாடு கடத்த இந்திய அரசு இங்கிலாந்துடன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்களா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணம் பத்தும் செய்யும் என்று வரும் பழமொழியை விஞ்சிய இத்தம்பதியினர் பணத்துக்காக கொலையையே செய்திருக்கிறார்கள்.