திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் குழந்தையை மீட்கும் பணியில் மழையால் இடையூறு ஏற்படாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நடுக்காட்டுப்பட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தாலும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதி மற்றும் மாலத்தீவு கடலோர பகுதிகளுக்கு அடுத்த இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.