மழை – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

கனமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது மழையால் தொற்று நோய் எதுவும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளீச்சிங் பவுடர் மற்றும் மருந்துப் பொருட்களை இருப்பில் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்கவும், போதுமான மருந்துகள் இருப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் நியாயவிலை கடைகளில் இரண்டு மாதத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்க அனைத்து துறை சார்ந்த செயலர்களும் துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே