தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் முதல் இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக வெயில் நிலவி வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் அங்கு ஒரு சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

சென்னையில் அண்ணா சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இதேபோல் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்; நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே