இறங்கி வரும் ராகுல் காந்தி… பச்சை கொடி காட்டுவாரா சச்சின் பைலட்?

ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் பனிப் போர் நடந்து வருகிறது.

துவக்கத்தில் முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என்று சச்சின் பைலட் கெடு வைத்து இருந்தார்.

ஆனால், மூத்த தலைவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சித் தலைமை கெலாட்டிற்கு கொடுத்து இருந்தது. 

இந்த நிலையில், இரண்டு கோஷ்டிகளாக ஆட்சியிலும், கட்சியிலும் செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்தப் பனிப் போர் கடந்த சனிக்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது.

இதற்கு பின்னணியில் இருப்பது பாஜக என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ரூ. 2000 கோடிக்கு பாஜக விலை பேசுகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி போலீசிலும் புகார் அளித்து இருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால், தானும், தனது ஆதரவாளர்களும் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக சச்சின் பைலட் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

தனக்கு ஆதரவு அளிக்கும் 30 எம்.எல்.ஏ.களை அழைத்து சென்று டெல்லியில் முகாமிட்டார்.

ஆனால், அங்கு சென்ற பின்னரும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் சந்திக்க முடியாமல் ஒதுக்கப்பட்டார். பாஜகவுக்கு செல்ல முயற்சித்தார்.

ஆனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த எம்.எல்.ஏ.,க்களில் சிலர் ஜெய்ப்பூரில் முதல்வரின் வீட்டில் இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அசோக் கெலாட் கூறினார்.

இந்த நிலையில், சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தொலைபேசியில் பேசி சமாதானம் செய்து, அவருடைய குறைகள் அனைத்தும் கட்சிக் கூட்டத்தில் எடுத்து வைக்கப்படும் என்று தலைவர்கள் இருவரும் ஆறுதல் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களான அஹமத் பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் சச்சினுடன் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே பேச முயற்சித்தபோது, சச்சின் பேசவில்லை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கட்சி அலுவலகத்தில் இருந்து சச்சின் பைலட்டின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஆஜராகுமாறு சச்சின் பைலட்டுக்கு சிறப்பு போலீஸ் குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கொறடா, சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த போலீஸ் குழு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே