ஜனவரி 15க்குள் பள்ளிகளில் 7200 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:

வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும். கரும்பலகைகள் இல்லாமல் செய்திட 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் பலகைகள் ஏற்படுத்தப்படும்.

7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்படும். 

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:

பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம்.

மருத்துவக் குழுவினர், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை கேட்டு தேவைப்படும் நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்.

இந்தாண்டு 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களும், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீத பாடங்கள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடங்களில்தான் இறுதித் தேர்வுக்கான கேள்விகளும் இடம்பெறும்.

கல்வி, வேளாண்மை, தொழில் என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால், புயல், மழை, வெள்ளக் காலங்களில் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்படவில்லை.

தடையில்லா மின்சாரம், சட்டம்-ஒழுங்கு பேணி காத்தல், அமைதியான மாநிலம், தொழில் தொடங்க அனைத்து கட்டமைப்புமகளும் உள்ள மாநிலம் என தொழில்துறையினரால் வரவேற்பை பெற்ற மாநிலமாக உள்ளது.

இதுமட்டுமல்லாது, பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவதை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர் என்றார்.

இந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, தொடக்கக் கல்வி துணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிக்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே