தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது தகவல் ஆணையம் ஆகும்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பிரியாவின் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில், காலியாக இருந்த மாநில தலைமை தகவல் ஆணையரை பரிந்துரை செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டதில் தலைமைச்செயலாளர் கே.சண்முகம், நிர்வாக சீர்த்திருந்த துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.

இதை தொடர்ந்து மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்து இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைமை தகவல் ஆணையராக செயல்படுவார் அல்லது 65 வயதாகும் வரை இப்பொறுப்பை வகிப்பார்.

மேலும் ஆர்.ராஜகோபாலுக்கு பதில் தமிழக ஆளுநரின் செயலாளராக இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர் ஒருவர் என மூன்று பேர் அடங்கிய குழு தான், தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்து விட்டு, பெயரளவிற்கு இந்த தேர்வு கூட்டத்தை நடத்தியதாகவும், தனக்கு அனுப்பிய கடிதத்தில் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த தகவல் குறிப்புகள் இணைக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே