ட்ரம்ப் ஆட்சி மீது முன்னாள் அதிபர் ஒபாமா கடும் குற்றச்சாட்டு

உலகளவில் அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் சுமார் 13,47,309 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் சுமார் 80,037 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிபர் ட்ரம்ப், ஆரம்ப காலத்தில் காட்டிய அலட்சியமே அந்நாட்டின் இத்தகைய மோசமான நிலைமைக்குக் காரணமாகக் கூறப்பட்டு வருகிறது.

எனினும், அவர் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்தினாலும் சீனா மீதான விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வருவது குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ட்ரம்பைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஒபாமா தனது நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினர்களுடன் பேசுவது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியானது.

இதை யாகூ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இந்த ஆடியோவில் அவர் வரும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்கொள்ளத் தாயாராகி வரும் ஜோ பிடனுக்கு ஆதரவாக ஒன்று சேர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. நாம் குறிப்பிட்ட நபரை அல்லது கட்சியை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல சுயநலவாதத்தையும் பழைமைவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மற்றவர்களை எதிரியாகப் பார்க்கும் மனோபாவத்தையும்தான் நீண்டகாலமாக எதிர்த்துப் போராடி வருகிறோம்.

தற்போது இவை அமெரிக்க வாழ்க்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த அரசாங்கமாக இருந்தாலும் கூட கொரோனா வைரஸ் மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்தப் பேரழிவை மிகச்சிறந்த அரசுகளாலே சரியாகக் கையாள முடியவில்லை.

இந்தச் சூழலில், `அதில் என்னை முன்னிலைப்படுத்த என்ன இருக்கிறது?’… `மற்றவர்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடிக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருப்பது பேரழிவு காலத்தில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

எனவே, ஜோ பிடனுக்காகத் தேவையான அளவு நேரத்தைச் செலவிட்டு முடிந்த அளவு பிரசாரம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜோ பிடனுக்கு ஆதரவாக தெரிவிப்பதாக ஒபாமா கூறியிருந்தாலும் அதிபர் ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பதிலிருந்து அவர் விலகி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ஒபாமா, ட்ரம்பின் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய அவசர உணர்வை நீங்கள் அனைவரும் உணர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்” என்றும் முன்னாள் உறுப்பினர்களுடன் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமாவின் இந்தப் பேச்சு அரசியல் தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒபாமாவின் பேச்சு தொடர்பாக அவருடைய அலுவலகம் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 525 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: