கண்டக்டர் ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் – அதிமுக பதிலடி

கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்து உள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவரின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாம் அரசியலை கவனமாக பார்க்க வேண்டும் என்றார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சிற்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்து உள்ளது.

அதில்

  • ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார்.
  • சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.
  • ஆனால் அதெல்லாம் நடக்காது.
  • முதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர்.
  • ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும்.
  • தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர்.
  • அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர்.

ரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார்.

காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார் என்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே