பொதுமுடக்கம் நீட்டிப்பு ? மருத்துவக் குழு உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு – முதல்வர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் மீண்டும் முழுமையாக பொதுமுடக்கம் அறிவிப்பது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி ஆலோசித்து அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சிக்கு வெள்ளக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது:

வல்லரசு நாடுகளே கரோனாவை கட்டுப்படுத்த தடுமாறும் நிலையில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது.

வல்லரசு நாடுகளில் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயிர்ச் சேதம் குறைவாகவே உள்ளது.

பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கத்தை தமிழக அரசு சரியாகப் பின்பற்றி வருகிறது. இதன்காரணமாக கரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து வரும் 29ஆம் தேதி மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

அப்போது மருத்துவர்களின் கருத்துகளை கேட்டும், மத்திய அரசு வழிகாட்டுதலையும் கேட்டு முடிவு அறிவிக்கப்படும்.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன்12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்காக தண்ணீர் அளவை படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி பிரச்னையில் நல்ல தீர்வை பெற்று தந்தது அதிமுக அரசு. தமிழகம் முழுவதும் குடிமராமத்துத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

குடிமராமத்துத் திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 387.60 கோடி மதிப்பில் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே