இந்தியாவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவியப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பாதிப்பும் அதிகம் ஏற்பட்டிருந்தது. இதனால் மும்பையில் கொரோனா பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் அதில் படிப்படியாக வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கும் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று முதல் பொது மக்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கியது.
இதன்படி பொதுமக்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தவிர்த்து மற்ற நேரங்களில் பயணம் செய்ய முடியும்.
இந்த நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பொதுமக்கள் ஆர்வமாக மின்சார ரயில்களில் ஆர்வமாக பயணம் செய்தனர்.
அதேநேரத்தில் முக கவசம் அணியாமல் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.